மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான் pt web
தமிழ்நாடு

“ஆரணி தொகுதில் போட்டியிடுகிறேன்” - இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான் அறிவிப்பு

PT WEB

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் எனும் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப்புலிகள் என சமீபத்தில் மாற்றினார். இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதி வேட்பாளராக தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தொகுதியில் உள்ள மயிலம், செஞ்சி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட இடங்களை புகழ்ந்து தமது அறிக்கையில் மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம் மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க; செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட; நான் சுகவாசி அல்ல பந்தா-வாசி அல்ல. மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும் பாலூர் ஆரணியே அன்ன பட்சியே நினை என் மனதின் ஆழ்நிலை சக்தியாய் தாயார் மகளாய் துதித்து பணி செய்ய ஆணையிடுவாய். தாழ் திறவாய் தரணி போற்றும் ஆரணியே” என தெரிவித்துள்ளார்.

சீமானுடன் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணித்த மன்சூர் அலிகான், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். ஒருக்கட்டத்தில் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார்.

சீமானுடன் நாம் தமிழர் கட்சியில் மன்சூர் அலிகான் இருந்தபோது...

இதன்பின் தமிழ் தேசியப் புலிகள் என புதிதாக கட்சியையும் தொடங்கினார். பின் அக்கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என மாற்றியிருந்தார். இந்நிலையில் ஆரணி தொகுதியில் இவ்வருடம் களம்காண உள்ளார்.