மனோ தங்கராஜ் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

மீண்டும் அமைச்சரான மனோ தங்கராஜ்.. திமுக போடும் தேர்தல் கணக்கு என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

PT WEB

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மனோ தங்கராஜ் ஏற்கனவே வகித்து வந்த பால் வளத்துறையே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் நேற்று சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. செந்தில் பாலாஜியும் பொன்முடியும் ராஜினாமா செய்த நிலையில் அவர்கள் வகித்து வந்த பதவிகள் மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக மின்சார துறையும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்குத்துறையும் அளிக்கப்பட்டது. பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காதி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் அளிக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டது தேர்தலை நோக்கிய திமுகவின் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

2021இல் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அரசில் பால்வளத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை ஆகிய பொறுப்புகளை கவனித்த மனோ தங்கராஜ் கடந்தாண்டு அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவதன் ஒரு படியாகவே இந்நகர்வு பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதற்கேற்ப திமுக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் பாஜக சற்று பலமாக உள்ள நிலையில் அதற்கேற்ப அங்கு திமுக வியூகம் வகுத்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜனுக்கு அண்மையில் மாநில உணவு ஆணையத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. அதே நேரம் தென் மாவட்டங்களில் சமூக ரீதியான வாக்குகளை கவரும் உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்காதவர், துடிப்பாக செயல்படுபவர் என்ற அம்சங்களும் மனோ தங்கராஜுக்கு சாதகமாக அமைந்தன.