தமிழ்நாடு

சாலையில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்!!

webteam

சென்னையில் சாலையில் சென்ற சார்பதிவாளரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்துள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). இவர் இராயப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கிண்டி சிட்டி லிங்க் சாலையில் வந்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து கழுத்தை அறுத்துள்ளது. இதில் வெங்கட்ராமன் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

 உடனடியாக இது குறித்து கிண்டி போலீசில் புகார் அளித்தார் வெங்கட்ராமன். புகாரை ஏற்றுக்கொண்ட கிண்டி போலீசார், பட்டம் விட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான மாஞ்சா நூல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் பலர் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாஞ்சா நூல் பயன்பாட்டை ஒழிக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.