தமிழ்நாடு

மாஞ்சாவால் சிறுவனுக்கு காயம்; வாட்ஸ் அப் மூலம் போட்டி நடத்திய கும்பல் சிக்கியது..!

webteam

வாட்ஸ்அப் மூலம் மாஞ்சா காத்தாடி போட்டி நடப்பதாக வந்த தகவலையடுத்து இளைஞரிடமிருந்து 250 காத்தாடி மற்றும் மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் மோனித், தனது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல் சிறுவனின் மூக்கு மற்றும் கண் பகுதியில் கிழித்து காயத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான், வாட்ஸ்அப் மாஞ்சா விற்பனை வெளிச்சத்திற்கு வந்தது. சிறுவனுக்கு காயத்தை ஏற்படுத்திய மாஞ்சா காத்தாடியை விட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது மாஞ்சா மூலப் பொருட்களை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து பல இளைஞர்களை பிரபாகரன் ஈர்த்துள்ளார். அவரிடம் மாஞ்சா மூலப் பொருட்களை வாங்கி வீட்டிலேயே மாஞ்சா தயாரித்து பட்டம் விடுவதை பல இளைஞர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வாட்ஸ்அப் மூலமாகவே மாஞ்சா காத்தாடி பறக்கவிடும் போட்டிகளையும் பிரபாகரன் நடத்தி வந்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரபாகரனின் வீட்டிலிருந்து 250 காத்தாடிகள், காத்தாடி செய்ய பயன்படுத்தப்படும் கலர் பேப்பர்கள், மாஞ்சா நூல் கண்டுகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், பிரபாகரனுக்கு மாஞ்சா மூலப் பொருட்களை விற்றுவந்த அயனாவரத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.