தமிழ்நாடு

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு

Sinekadhara

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும் விநாயகருக்கென தனி ஆலயமும் கொண்ட நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். நாயக்க, பாண்டிய மன்னர்கள் ஆண்டகாலங்களில் இங்கு சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன. பெருமை மிகுந்த இந்த திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடந்து வருகிறது. கோவிலில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு மஞ்சள் பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த திருக்கோவிலில் சித்திரை திங்கள் முதல் நாள் தொடங்கி மூன்று நாட்கள் சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறும். இத்தகைய அரிய நிகழ்வு சித்திரை ஒன்றாம் தேதியான இன்று நடைபெற்றது சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தவுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகளும் அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.