தமிழ்நாடு

தமிழ் மறுமலர்ச்சியாளரான ”பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்”-க்கு மணிமண்டபம் கோரி வழக்கு!

தமிழ் மறுமலர்ச்சியாளரான ”பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்”-க்கு மணிமண்டபம் கோரி வழக்கு!

webteam

தமிழ் பற்றின் காரணமாக 1810ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, பல தமிழ் தொண்டாற்றிய சென்னை கலெக்டர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் கல்லறையை புனரமைத்து மணிமண்டபம் கட்டக் கோரிய வழக்கில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை முதன்மை செயலர்கள், தொல்லியல் துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த தீரன்திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1810ல் சென்னை கலெக்டராக இருந்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். தமிழ் மொழி மீதான பற்றால் தனது பெயரை எல்லீசன் என மாற்றிக்கொண்டவர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். மற்றும் திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார்.

இவரது காலம் தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருந்தது. ஓலைச்சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் ஆய்வுப் பணிகளுக்காக 1818ல் தென்மாவட்டங்களுக்கு வந்தார். 6.3.1819ல் ராமநாதபுரத்தில் தமிழ்தொண்டாற்றிய எல்லீசன் இறந்தார். இவரது கல்லறை ராமநாதபுரம் வடக்குத் தெருவில் தேவாலய வளாகத்தில் உள்ளது. இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் சென்னை மற்றும் மதுரையில் எல்லீஸ் நகர் என பெயர் வைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது ராமநாதபுரத்தில் அவரது கல்லறை பராமரிப்பின்றி இருந்து வருகிறது. எனவே, எல்லிஸ் கல்லறையை புனரமைப்பு செய்யவும், அந்த இடத்தில் ஸ்தூபி மற்றும் மணி மண்டபம் அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை முதன்மை செயலர்கள், தொல்லியல் துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.