தமிழ்நாடு

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் ஜல்லிக்கட்டு நாயகன்..!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் ஜல்லிக்கட்டு நாயகன்..!

Rasus

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மொத்தம் 954 காளைகள் ஜல்லிக்கட்டிற்காக பதிவு செய்திருந்த நிலையில் 704 காளைகள் போட்டிக்கு வந்திருந்தன. அவற்றில் 61 காளைகள் பரிசோதனைக்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 643 காளைகள் வாடிவாசலில் இருந்து திறந்து விடப்பட்டன. மாலை 4 மணி வரை 430 காளைகள் களம் கண்டன. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்றன. பதிவு செய்திருந்த 623 மாடுபிடி வீரர்களில் 576 பேர் போட்டிக்கு வந்தனர். அவர்களில் 97 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்‌பு 479 பேர் களம் கண்டனர்.

போட்டியின் முடிவில் மணிகண்ட பிரபு என்பவர் முதல் பரிசு பெற்றார். கோடீஸ்வரன் மற்றும் சூர்யா இரண்டாவது பரிசும், பரத்குமார் மூன்றாவது பரிசும் பெற்றனர். களத்தில் நின்று விளையாடிய 5 காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றமணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகளைஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

போட்டியின்போது மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 73 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களே பாராட்டி சென்றதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.