விஜய் - மாணிக்கம் தாகூர் Pt web
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் முதல்வரின் உரை.. "எதிர்க்கட்சிகளுக்கு சிறப்பான பதிலடி" - எம்பி மாணிக்கம் தாகூர்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது சொந்த பாணியில் முதல்வர் விஜய் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

முதல்வர் விஜய்

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்குப் பேரவைத் தலைவர், முதல்வர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார். எனினும், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இறுதியாக, மேலும் திமுக அரசை முதல்வர் விமர்சித்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தசூழலில் தான், முதல்வர் சட்டப்பேரவை உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது சொந்த பாணியில் முதல்வர் விஜய் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார் எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் வந்த எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஆற்றிய உரை வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், மிகவும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் அமைந்திருந்தது. தமிழக அரசியல் மாறி வருவதன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குத் தனது சொந்தப் பாணியில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர்

இதனைச் 'சினிமா பாணி' என்று விமர்சிப்பதை விட, தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும் மாடலும், முதலமைச்சரின் மாடலும் மாறியுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பழைய சொல்லாடல்கள் மாறி, சட்டமன்றம் தற்போது ஒரு ஜனரஞ்சக முறைக்கு வந்துள்ளது. வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் நேரலையில் பார்த்த ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடராக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.