மாணிக்கம் தாகூர் - அனிதா ராதாகிருஷ்ணன் web
தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்தும் பேச்சு.. திமுக MLA மன்னிப்பு கேட்கவேண்டும்! - மாணிக்கம் தாகூர்

உங்களை போன்ற துரோகிகள் நாட்டில் உண்டா என காங்கிரஸ் கட்சியை திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.

Rishan Vengai

2026 தேர்தலில் திமுக கூட்டணியுடன் 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், பின்னர் தவெக உடன் இணைந்ததை துரோகம் என குற்றம்சாட்டி, திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாகவும் கொச்சையாகவும் விமர்சித்தார். அவரது ‘பொ** பயல்’ போன்ற இழிவான சொற்கள் சர்ச்சை கிளப்ப, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இது அரசியல் நாகரிக வீழ்ச்சி எனக் கூறி, அவர் மன்னிப்பு கோரவேண்டும் என திமுக தலைமையை கண்டனம் தெரிவிக்குமாறு எச்சரித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து களம்கண்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் இணைந்து செயல்படும் என தங்களுடைய கூட்டணியை உறுதிசெய்தது. அதாவாது திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு.

ராகுல் காந்தி - முக ஸ்டாலின் இடையே விழுந்த விரிசல்

இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர் தேர்தலுக்கு முன்பே அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டியது தானே, தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்து வென்றுவிட்டு தற்போது விலகுவது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினர். பல திமுக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை துரோகி என்றும் விமர்சித்தனர்.

இந்தசூழலில் தான் தற்போது காங்கிரஸை கடுமையாக சாடியிருக்கும் முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கொச்சையாக பேசி காங்கிரஸை விமர்சித்துள்ளார். அதற்கு மாணிக்கம் தாகூர் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைமையை கேள்வி எழுப்பியுள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்..

திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த நடிகரை விட நம்மிடமிருந்து பிரிந்து சென்ற துரோகிகளை பற்றி பேச வேண்டாமா? உங்கள் தலைவர் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று கூறிய எங்கள் தலைவரை மறைந்து விட்டாயா. அதை மறந்த காங்கிரஸ் துரோகிகளே, உங்களைப் போல் துரோகி நாட்டில் உண்டா. எப்படி ஓடிப்போய் இந்த ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்தீர்கள். பொ** பயலாக இருந்தால் நீங்கள் தேர்தலுக்கு முன்பே நாங்கள் உங்களோடு கூட்டணி வைக்கவில்லை என்று கூற வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு எங்கள் இயக்கத்துடன் சேர்ந்து எங்கள் இயக்கத் தோழர்கள் கஷ்டப்பட்டு உங்கள் ஐந்து பேரை வெற்றி பெற வைத்தால் ஓடிப்போய் சேர்கிறீர்களே” என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.

அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் மாணிக்கம் தாகூர், “திமுக தலைமையிடம் ஒரு கேள்வி — இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி. அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.