மணிசங்கர் ஐயர், கே.சி வேணுகோபால் Pt web
தமிழ்நாடு

காங்கிரஸில் முற்றும் மோதல்| ”கே.சி. வேணுகோபால் ஒரு ரவுடி..” - மணிசங்கர் அய்யர் கடும் தாக்குதல்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ஆலப்புழை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி வேணுகோபலை, அதே கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணிசங்கர் ஐயர் ’ரவுடி’ என விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

காங்கிரஸ் கட்சியில் மோதல் தீவிரமடைந்துள்ளது. மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை ரவுடி என விமர்சித்துள்ளார். கேரளா மற்றும் தமிழக அரசியலில் இது பெரும் விவாதமாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதேபோல, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த சூழலில்தான், கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கூறிவருவது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிசங்கர் ஐயர், கே.சி வேணுகோபால்

சமீபத்தில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், கேரளத்தில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான அரசே வரவேண்டும் எனத் தெரிவித்திருந்தது அக்கட்சி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து. இதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், மணிசங்கர் அய்யர் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என தெளிவுபடுத்தியிருந்தார். அதேசமயத்தில் மணிசங்கர் அய்யர் தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அந்தவகையில் தான், இன்று தனியார் ஆங்கில செய்தி ஊடகத்திடம் பேட்டியளித்துள்ள மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலை ரவுடி என விமர்சித்துப் பேசியிருக்கிறார். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரசின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கருக்கு பதிலாக கே.சி வேணுகோபால் நியமிக்கப்படலாம் என பேச்சு எழுந்து வரும் நிலையில், மணிசங்கர் பேசியது கேரளாவையும் தமிழக அரசியலிலும் பேசுபொருளாகியிருக்கிறது.

கே.சி வேணுகோபால்

இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை வேண்டும்!

அதுமட்டுமின்றி தனியார் செய்தி ஊடகத்திடம் மணிசங்கர் அய்யர் பேசிய வேறு சில கருத்துக்களும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

குறிப்பாக “இந்தியா கூட்டணி வலுபெற வேண்டுமானால், அதை ஒருங்கிணைக்க மிகச்சிறந்த நபர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். கடந்த ஓராண்டாக இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்குத் தேவையான மிக முக்கியமான ஆக்கபூர்வமான கருத்துக்களை அவர் மட்டுமே பேசி வருகிறார். எனவே, மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் தலைவராக வருவதற்கு அனைத்து தகுதிகளும் கொண்டவர்” என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.