தமிழ்நாடு

விழுப்புரம்: சோப்பு நீரில் ஊற வைக்கப்படும் மாம்பழங்கள் - மக்கள் அதிர்ச்சி

ஜா. ஜாக்சன் சிங்

மேற்புறத் தோலில் கருப்பாக இருக்கும் மாம்பழங்களை சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்வது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் மாம்பழ விளைச்சல் அதிகம் இருந்தாலும் பூச்சி தாக்குதலால் மாம்பழங்களின் தோலின் மீது ஆங்காங்கே கருப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த மாம்பழங்களை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிகிறது. இதனால் துணிகளை ஊறவைக்கும் சோப்பு பவுடரில் மாம்பழங்களை 10 நிமிடங்கள் ஊறவைத்து, தேங்காய் நார் உதவியுடன் தேய்த்து அதன் மேற்புறத்தில் உள்ள கருப்புகளை அகற்றி பளபளப்பாக்கி விடுகின்றனர்.

பின்னர் நல்ல தண்ணீரில் மாம்பழத்தை சுத்தம் செய்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளின் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், இதனை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.