அன்புமணி - ராமதாஸ்  எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம்” - ராமதாஸ் நம்பிக்கை!

மாம்பழம் சின்னம் எங்களுக்கு தான் சொந்தம் எனவும் நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Premkumar S

பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்பூசல் காரணமாக, அன்புமணி தரப்பு பாமக மற்று ராமதாஸ் தரப்பு பாமக என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அன்புமணி தரப்பு பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு இன்னும் எந்தக் கூட்டணியிலும் இணையாமலேயே இருந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுகவுடன் கூட்டணி வைப்பதே முதல் தேர்வாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே அக்கூட்டணி விசிக இருப்பதால் திமுக தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

மருத்துவர் ராமதாஸ்

இதற்கிடையில் தான், பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழம் சின்னத்தை, அன்புமணி தரப்பு மற்றும் ராமதாஸ் தரப்பு என இரு அணிகளும் உரிமை கோரி வருகின்றனர். மேலும், மாம்பழம் சின்னம் தங்களுக்கே சொந்தம் என நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பான விசாரணை விரைவில் நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில் தான் நேற்று, செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உறவினர் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக நிறுவனர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் இந்நிகழ்விற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி, மகள் காந்திமதி மற்றும் முகுந்தன் ஆகியோர் குடும்பத்துடன் வருகை தந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மாம்பழம் சின்னம் எங்களுடையது தான், எங்களுக்கு சொந்தமானது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும், மாம்பழ சின்னம் எங்களுக்கு சொந்தமாகும் என தெரிவித்தார். மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என பேட்டியளித்தார்.