காரைக்காலில் அதிகரிக்கப்படும் மந்தி பிரியாணி கடைகள் web
தமிழ்நாடு

இனி காரைக்கால் வந்தாலே ‘மந்தி’ தான்.. அதிகரிக்கும் மந்தி உணவகங்கள்.. என்ன காரணம்?

வேலை நிமித்தமாக காரைக்கால் மாவட்டத்திலிருந்து அரபு நாடுகளுக்குச் சென்ற இளைஞர்கள், இந்த மந்தி உணவின் சுவையால் ஈர்க்கப்பட்டு அந்தச் சுவையைத் தங்கள் சொந்த ஊர் மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மந்தி.

PT WEB

இளைஞர்கள் ஆரோக்கியத்தை கருதி பிரியாணியை விட மந்தியை விரும்புகின்றனர். மசாலா குறைவாக உள்ளதால் எரிச்சல் இல்லாமல் செரிமானமாகிறது. அரபு நாடுகளில் பிரபலமான மந்தி, இங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்தியாளர் - Abdul Aleem

le bait al mandi

தமிழகத்தின் உணவுக் கலாச்சாரம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு முதலில் வருவது நறுமணமிக்க பிரியாணிதான். ஆனால், சமீபகாலமாக அந்தப் பிம்பத்தை மாற்றி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது அரபு நாடுகளின் பாரம்பரிய உணவான 'மந்தி'. குறிப்பாக, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரியாணி விற்பனையை விட மந்தி உணவின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

mandi

இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. இந்தியா முழுவதும் வீடுகள் மற்றும் திருமண விழாக்களில் நாம் பிரியாணியைக் கொண்டாடுவது போல, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் மந்தி என்பது அவர்களின் அன்றாட மதிய உணவாக இருந்து வருகிறது. வேலை நிமித்தமாக காரைக்கால் மாவட்டத்திலிருந்து அரபு நாடுகளுக்குச் சென்ற இளைஞர்கள், அங்கு தங்களுக்குக் கிடைத்த இந்த மந்தி உணவின் சுவையால் ஈர்க்கப்பட்டனர். அந்தச் சுவையைத் தங்கள் சொந்த ஊர் மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே காரைக்காலில் மந்தி உணவகங்களைத் தொடங்கினர்.

mandi

தற்போது காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மந்தி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மந்தி உணவில் மசாலாப் பொருட்கள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்கப்படுகின்றன. இதனால் இது உடலில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாமல், உண்ட உடனேயே எளிதில் செரிமானமாகி விடுகிறது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் இன்றைய இளைஞர்கள், பிரியாணியைத் தவிர்த்துவிட்டு மந்தியைத் தேடிச் செல்வதற்கு இதுவே முக்கியக் காரணமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் அல்-ஃபஹாம் சிக்கன் மந்தி, தந்தூரி சிக்கன், கிரீமி சிக்கன், இஃபா சிக்கன் மற்றும் மட்டன் மந்தி எனப் பல்வேறு வகைகள் உணவுப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

காரைக்கால் வழியாக நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும், இப்போது காரைக்காலில் தங்கி மந்தி உணவைச் சுவைப்பதைத் தங்களது பயணத்தின் ஒரு அங்கமாகவே மாற்றியுள்ளனர். இது உள்ளூர் பொருளாதாரத்திலும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புனித ரமலான் மாதம் என்பதால், நோன்பு திறக்கும் இஃப்தார் நேரங்களிலும், அதிகாலை ஸஹர் நேரங்களிலும் இஸ்லாமியப் பெருமக்கள் மந்தியை அதிகளவில் விரும்பி உண்கின்றனர்.

people at the restaurant

திரை உலகப் பிரபலங்கள் முதல் முக்கியப் பிரமுகர்கள் வரை காரைக்காலுக்கு வரும்போது மந்தி உணவை ஆர்வத்துடன் கேட்டுச் சாப்பிடுவது இதன் புகழை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் திருமண வீடுகளில் பிரியாணி மட்டுமே பிரதானமாக இருந்த நிலை மாறி, இன்று பல திருமண விருந்துகளில் மந்தி உணவு வழங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மந்தி உணவக உரிமையாளர்களான ரிஃபாய் மற்றும் சாதிக்கான் ஆகியோர் கூறுகையில், மந்தி உணவின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பிரியாணி விற்பனையை விட இது முன்னிலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பொதுமக்களில் ஒருவரான தாஹாவும், அரபு நாடுகளில் தாங்கள் ரசித்த அதே சுவை இங்கும் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.