சிவகங்கை மானாமதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை தனியார் பள்ளிக்கு மாற்றாமல், திருப்புவணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகே உள்ள கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது மகள் தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை படித்து வந்தார். 6-ஆம் வகுப்பிற்கு செல்ல வேண்டிய நிலையில், திருப்புவணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவரை சேர்த்துள்ளார்.
எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் தனது மகளின் கல்வியை அரசுப் பள்ளியிலேயே தொடரச் செய்திருப்பது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தானும் அரசுப் பள்ளியில்தான் படித்ததாகவும், தனது மகளும் அரசுப் பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன், அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.