வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மூன்றரை வயது மகனை கிணற்றில் வீசி கொலை செய்து தப்பியோடிய தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து 2 மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். மன உளைச்சலில் இருந்து வந்த அவர் தனது 7 வயது மகன் மற்றும் மூன்றரை வயது மகன் ஆகிய இருவரையும் வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் வீசியுள்ளார். இதில் 7வயது மகன் நீந்திக் கரைக்கு வந்தார்.
பின்னர் அவரை வீட்டிற்கு அழைத்துவந்த முனியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து சிறுவன் கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து முனியப்பனை காப்பாற்றினர். பின்னர் சிறுவன் அளித்த தகவல் அடிப்படையில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்றரை வயது சிறுவனின் உடலை மீட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அங்கிருந்து தப்பியோடிய முனியப்பனை தேடி வருகின்றனர்.