வீட்டுமனைக்கு பட்டா வழங்கவில்லை எனக்கூறி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் தரமணி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(59). இவர் செய்யூர் தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள தனியார் வீட்டுமனை பிரிவில் 1500 சதுர அடியில் வீட்டுமனை வாங்கியதாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீட்டுமனைக்கு செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் பட்டா வழங்கவில்லை எனவும் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை எனவும் கூறி வேல்முருகன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றி மாவட்ட ஆட்சியர் முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தற்கொலைக்கு முயன்றதாக வேல்முருகன் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், “தனியாருக்கு சொந்தமான வீட்டு மனைப்பிரிவில் பட்டா வழங்க முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையினரிடம் மனு அளித்து கடந்த பத்தாண்டுகளாக ஓய்ந்து போய்விட்டேன். இதனால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன். இனியாவது என் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.