ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சதீஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் மனைவி 47 வயது வளர்மதி, சென்னை கீழ்பாக்கம் நியூஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பரிதாபமாக உயிரிழந்தார்.
வளர்மதியின் இரண்டு மகள்களும், ஒரு மகனும் அதே நாளில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது தங்களுக்கும் உடலில் பல கோளாறுகள் ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வளர்மதியின் மகள் சரண்யா கூறும்போது, ’நான் உள்பட 4 பேருக்கும் சிறிது இடைவெளி விட்டுவிட்டு ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்தார்கள். அறுவை சிகிச்சைக்கு பின் தண்ணீர் குடித்தால் கூட வாந்தி வருகிறது. வாந்தி வருவது நிற்கவே இல்லை’ என்றார்.
வளர்மதியின் மகன் சதீஷ் கூறும்போது, ’நான் ஆட்டோ ஓட்டுகிறேன். அறுவை சிகிச்சைக்கு பின் எப்போதும் மயக்கம் வருவது போல் இருக்கிறது. அதிகப்படியான உடல் வலி தொடர்ச்சியாக உள்ளது. ஒருவேளை ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை. மொத்தமாக 3 வேளைக்கும் 3 இட்லி கூட சாப்பிடுவது கஷ்டமாக உள்ளது’ என்றார்.