போலீஸ் எனக் கூறிக்கொண்டு பள்ளி மாணவனிடம் விலை உயர்ந்த 2 கேமரா பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் எதிரே திரிசூலம் மலையடிவாரத்தில் மத்திய தொழில் பாதுகாப்படை, இராணுவத்தினர் ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப்படும் இடம் உள்ளது. இப்பகுதியில் நவின்(16) என்ற 12-ம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சென்று தனது விலையுயர்ந்த கேமராவில் அப்பகுதியை படம் பிடித்துள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் போலீஸ் எனக்கூறி மாணவனை மிரட்டி இதுதடை செய்யப்பட்ட பகுதி இங்கெல்லாம் வரக்கூடாது எனக் கூறி மாணவனிடம் இருந்த இரண்டு விலையுயர்ந்த 1,00,000 மதிப்புள்ள கேமராவை பறித்து சென்றுள்ளார்.
இதனையடுத்து இது குறித்து தனது தந்தை சிவராமனிடம் கூறியுள்ளார் நவீன். மாணவனின் தந்தை மீனம்பாக்கம் காவல் நிலையம் சென்று கேட்டபோது போலீசார் யாரும் கேமராவை வாங்கி வரவில்லை என கூறியுள்ளனர். அதன் பிறகு யாரோ போலீஸ் என ஏமாற்றியுள்ளதை அறிந்து இச்சம்பவம் குறித்து சிவராமன் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.