சென்னையில் ஏடிஎம் ஒன்றில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.59 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றிற்கு பணத்தை செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது பணம் செலுத்தும் இயந்திரத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட 59,800 ரூபாய் பரிவர்த்தனை நடைபெறாமல் வெளியே வந்துள்ளது. ஏற்கெனவே ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்திய யாரோ ஒருவர் தான் பரிவர்த்தனை முடியும் முன்னே கிளம்பியிருக்க வேண்டும் என்று உணர்ந்த செந்தில், பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியும் மூடப்பட்ட நிலையில் பணத்தை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் செந்தில்.
பணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் தலைவைசாமி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட பணம் அயனாவரத்தைச் சேர்ந்த சுகுமாருக்கு சொந்தமானது என்றும், தனது சொந்தக்காரருக்கு பணத்தை செலுத்த ஏடிஎம்க்கு வந்த அவர், பரிவர்த்தனை முடியும் முன்னரே கவனிக்காமல் கிளம்பிவிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பணம் சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த செந்திலை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.