மேட்டூர் அருகே அமாவாசைக்காக உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயில் வழுக்கி விழுந்து லாரிக்கு அடியில் சிக்கியதில் இரவு காவலாளி ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தவர் ரங்கசாமி. இவர் நேற்று இரவு பணி முடிந்து தனது மிதிவண்டியில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது சிட்கோ அருகே மகாளய அமாவாசையை முன்னிட்டு உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயில் மோதி கீழே சாய்ந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தகவலறிந்த கருமலைக்கூடல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிட்கோ தொழிற்பேட்டையில் கெமிக்கல் ஆலை, ரசாயன உரம் தயாரிக்கும் ஆலை, இன்ஜினீயரிங் தொழிற்சாலை என 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது, இதற்காக நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட சரக்குவாகனங்கள் வந்து செல்லும் நிலையில் இது போன்ற இடங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.