தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தவர் தற்கொலை... கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ்!

webteam

அரியலூரில் கொரோனா வார்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அரியலூர் மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள அறக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. வயது (60) இவர் கேரளாவில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். கேரளாவில் கொரோனா பரவியதை அடுத்து அங்கிருந்து புறப்பட்டு தனது சொந்த ஊரான கடம்பூருக்கு நாராயணசாமி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ம்தேதி நாராயணசாமிக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 7ம்தேதி நாராயணசாமியின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மன உளைச்சலுடன் நாராயணசாமி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு நாராயணசாமியின் பரிசோதனை முடிவுகள் வந்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. ஆனால் இதனை நாராயணசாமி அறிந்துகொள்வதற்கு முன்பே தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா நோயுக்கு சிகிச்சை அளிப்பது போலவே தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு உரிய மனதைரியத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.