தமிழ்நாடு

விஷவாயு தாக்கி தந்தை உயிரிழப்பு: மீட்கச் சென்ற 2 மகன்கள் மருத்துவமனையில் அனுமதி

விஷவாயு தாக்கி தந்தை உயிரிழப்பு: மீட்கச் சென்ற 2 மகன்கள் மருத்துவமனையில் அனுமதி

webteam

கோவையில் விஷவாயு தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில், அவரை மீட்கச்சென்ற 2 மகன்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர். 72 வயதான இவர் தனது மனைவி பத்மாவதி (55 ) மகன்கள் பாலாஜி( 49) , முரளி( 45) ஆகியோருடன் வசித்து வருகின்றார். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

இன்று அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் தந்தை திரும்பாததால் இரண்டாவது மகன் முரளி தந்தையை அழைத்து வர கழிவறைக்கு சென்றுள்ளார். தந்தை கழிவறையில் மயங்கி கிடந்ததைப்பார்த்த முரளி அவரை மீட்க முயன்ற போது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

தந்தையும், அவரை அழைத்து வர சென்ற தம்பியும் நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த மூத்த மகன் பாலாஜி கழிவறைக்கு சென்றார். இருவரும் விஷவாயு சுவாசித்த நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அவர்களை மீட்க முயன்ற போது பாலாஜியும் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த பானுமதி அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அவர்கள் வீட்டிற்குள் வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த ஸ்ரீதர் ,முரளி, பாலாஜி ஆகியோரை மீட்டனர். அப்போது பாலாஜி மட்டும் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீதர், முரளி ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறியதா அல்லது கழிவறையின் அருகில் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்து விஷவாயு கழிவறைக்குள் வந்துள்ளதா என்பது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.