கன்னியாகுமரி அருகே பேய் விரட்டியதாக கனவு கண்டு பயத்தில் கிணற்றில் குதித்த இளைஞரை அரை மணி நேரம் போராடி தீயணைப்புப் துறையினர் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஸ்டீபன். இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பேய் விரட்டுவதாக கனவு கண்டதாக கூறப்படுகிறது. இதில் பயந்து வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த அவர், அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
காலையில் கிணற்றின் அருகே உள்ள கோயிலுக்கு வந்த அர்ச்சகர் கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு அங்கே சென்று பார்த்தார். அப்போது கிணற்றின் உள்ளே ஸ்டீபன் ஒரு அடி தண்ணீரில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து சிறு காயத்துடன் ஸ்டீபனை மீட்டனர். இதுகுறித்து ஸ்டீபன் கூறுகையில், மூன்று பேய்கள் தன்னை விரட்டியதால் கிணற்றில் குதித்ததாக தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.