CCTV footage pt desk
தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்தபடி நாகர்கோவிலில் கொள்ளையர்களை விரட்டியடித்த வீட்டு உரிமையாளர்! என்ன நடந்தது?

நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்றவர்களை வெளிநாட்டில் இருந்து சிசிடிவி-யால் கண்காணித்த வீட்டின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். மஸ்கட் நாட்டில் வேலை பார்த்து வரும் இவர், தனது வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்த பீரோவை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

CCTV footage

அதை வெளிநாட்டில் இருந்த சலீம், சிசிடிவி காட்சிகளை தனது செல்போனில் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இரண்டு நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சலீம், அவரது பக்கத்து வீட்டு நபருக்கு போன் செய்து தனது வீட்டில் திருடர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உடனடியாக பக்கத்து வீட்டினர் வெளியே வந்து திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதறிப்போன திருடர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்றனர்.

பின், இது தொடர்பாக கோட்டார் போலீசாருக்கு தகவல் அளித்த சலீம், நாளை வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவரும். இந்த சம்பவம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.