தமிழ்நாடு

‘நான் ரவுடி எல்லாம் கிடையாது’ - ‘அட்டக்கத்தி’யான கபாலி

rajakannan

துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதால் கைது செய்யப்பட்ட நபர், தான் தவறு செய்துவிட்டதாக பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கபாலி என்ற கபாலீஸ்வரன் வசித்து வருகிறார். இவர் நாமக்கலைச் சேர்ந்த பெண் ஒருவரை 2வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அந்தப் பெண், அதில், கபாலீஸ்வரன் BSNL-ல் பணிபுரிவதால் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் ஏமாற்றியதாகவும், பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார். அவர் துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ ஒன்றையும் வெளியிட்ட அவர், அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து கபாலீஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என தெரியவந்தது. இந்நிலையில், தான் ரவுடி எல்லாம் கிடையாது என்ற கபாலீஸ்வரன், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “என் மனைவிக்கும், எனக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. சிங்கப்பூரில் இருக்கும் மனைவியை தமிழகம் வருமாறு அழைத்திருந்தேன். மனைவியை தமிழகம் வர வைப்பதற்காக பொம்மை துப்பாக்கியை காண்பித்து மிரட்டினேன். எனது நடவடிக்கையால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்திவிட்டேன். நான் ரவுடியும் இல்லை, எனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை” என்று கூறியுள்ளார்.