தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேல்முருகன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை தேசத் துரோக வழக்கில் நெய்வேலி போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி ஜெகன்சிங் என்பவர் தீக்குளித்தார். கடலூர் மாவட்டம் பெரியாண்டிகுழி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்சிங், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிளை கழக செயலாளராக உள்ளார். உடலில் 85 சதவிகித தீக்காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜெகன்சிங் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.