தமிழ்நாடு

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் வடிய வடிய வந்தவரால் பரபரப்பு

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்தம் வடிய வடிய வந்தவரால் பரபரப்பு

Rasus

ரத்தம் வடியும் முகத்துடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஒருவர் ரத்தம் வடியும் முகத்துடன் காரில் வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சென்னை மண்ணடியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பது தெரியவந்தது. கடந்த மாதம் சையது இப்ராஹிமின் மகளுக்கும் லண்டனில் பணிபுரியும் முகமது அஸ்லாம் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முகமது அஸ்லாம் லண்டனில் பணியாற்றுவதாக கூறியது பொய் என்று தெரிய வந்ததால் திருமணத்தை சையது இப்ராஹிம் நிறுத்தி விட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்து சையது இப்ராஹிமிடம், முகமது அஸ்லாம் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக இப்ராஹிம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் அஸ்லாமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்லாமின் உறவினர்கள் மண்ணடியில் வைத்து இப்ராஹிமை தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் ரத்தத்துடன் ஆணையர் அலுவலகம் வந்ததாகவும் காவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து இப்ராஹிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வடக்கு கடற்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.