திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் , அவர் வேலை பார்த்த சூலூர்பேட்டை தாபாவின் உரிமையாளரிடமும் 12 மணி நேரத்திற்கும் மேல் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த 14 நாட்களாக காவல் துறையினர் 18 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இருப்பினும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கைதான இளைஞரை கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்துச் சென்றனர். கைதானவரின் அடையாளம் , திருவள்ளூர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் புகைப்படத்தோடு அதாவது சிசிடிவியில் பதிவான உருவத்துடன் ஒத்துப்போவதாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், டிஜஜி தேவராணி, திருவள்ளூர் எஸ்பி விவேகானந்தா சுக்லா ஆகியோர் சந்தேகத்தில் கைதான நபரிடம் 12 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இளைஞர் சூலூர் பேட்டையில் அமைந்துள்ள தாபாவில் பணியாற்றி வந்தது தெரியவந்தநிலையில், அதன் உரிமையாளரிடமும் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவரிடம் 12 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெறும் விசாரணையில் தாபாவின் உரிமையாளரும் வடமாநிலத்தவர் என்று கூறப்படும் நிலையில், கைதான அந்த இளைஞர் எப்படி பணிக்கு சேர்ந்தார், எப்போதெல்லாம் விடுமுறை எடுத்திருக்கிறார், சம்பவத்தினத்தன்று அந்த நபர் எங்கு இருந்தார் என்பதெல்லாம் விசாரிக்கப்பட்டுவருகின்றது. கைதான நபரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்டவரை தங்களுக்கு காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தி காவலர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆரம்பாக்கம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கிய நிலையில், செல்போன் வெளிச்சத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இது போக்சோ வழக்கு என்பதால், கைதான இளைஞரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.