வளசரவாக்கத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்தவர் நான்காவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றபோது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(47). இவரது மனைவி தேவிகா. இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷ்னர் மகிமைவீரன், ராயலாநகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அஜித்குமாருக்கு ஏற்கெனவே மூன்று முறை திருமணம் நடந்து தற்போது நான்காவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “கேரள மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்கும் பணியில் ஈடுபடும் அழகான பெண்களை பணிக்கு அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் கேரளத்தில் உள்ளனர். அவர்களுக்கு தெரியாமல் மூன்றாவதாக தேவிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் அஜித்குமார் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில வாரங்களாக தேவிகாவிற்கும், அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அஜித்குமார் தேவிகாவை விட்டு பிரிந்து அருகில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அஜித்குமார் விடுவிக்கப்பட்டார். திரைப்பட பாணியில் மூன்று பெண்களை ஏமாற்றி நான்காவதாக ஒருவரை திருமணம் செய்ய திட்டம் தீட்டியபோது சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.