சென்னையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் அவர்களை ஆபாசமாக படமெடுத்து பணம் பறிப்பதாக விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விடுதி ஒன்றில் விருகம்பாக்கம் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கியிருந்த சிலரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
பக்கத்து அறையில் இருந்து இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் தெரிகிறது. அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவரை சிலர் ஆபாசமாக படமெடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர் விசாரணையில் இளைஞரை ஆபாசமாக படமெடுத்தது ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறிக்கும் கும்பல் என்று தெரியவந்தது. இதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த மந்திரமூர்த்தி, மரியப்பன், முத்துராமலிங்கம் மற்றும் இளையராஜா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.