தமிழ்நாடு

“தமிழக முதல்வர் வீட்டில் குண்டு” : போன் மூலம் மிரட்டிய நபர் கைது

webteam

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குண்டு வைத்திருப்பதாக கூறி போன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு போன் கால் ஒன்று வந்தது. போனில் பேசிய நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த போன்கால் மடிப்பாக்கத்தில் இருந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போனில் மிரட்டியது மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதானவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதும், இவர் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் முதல்வர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைதாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.