கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த மூக்காகவுண்டனூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் பெருமாள். இவர் கடந்த 5 வருடங்களாக கிராமங்களுக்கு தேவையான சிறு சிறு மளிகை பொருட்களை வைத்து மளிகை கடை நடத்தி வருகிறார் .
கொரோனா எதிரொலியாக மது விற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சிலர், விதிகளை மீறி கிராமப் புறங்களில் கள்ளசாராயம் காய்ச்சி விற்று வருகின்றனர். முன்னதாக ஒரு லிட்டர் சாராயம் ரூ.300க்கு விற்று வந்த நிலையில் தற்போது கொரோனா எதிரொலியாக சாராயம் லிட்டர் ரூ.1300க்கு விற்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த பெருமாள் சாராய வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு சாராயத்தை வாங்கி, ஒரு லிட்டர் ரூ.1300க்கு மது பிரியர்களுக்கு விற்று வந்துள்ளார். இதனை அறிந்த மத்தூர் காவல் துறையினர், பெருமாளின் மளிகை கடைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 9 லிட்டர் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பெருமாளை மத்தூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.