பிஸ்கட்டுக்குள் கஞ்சா pt
தமிழ்நாடு

சேலம் மத்திய சிறை | பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சா.. ஒருவர் கைது!

சேலத்தில் பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து சிறைக்கைதிக்கு கொடுக்க முயன்ற நபரை சிறைகாவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

PT WEB

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவர்களை சந்திக்க உறவினர்கள் நண்பர்கள் வருவது வழக்கம்.

அதன்படி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய கவியரசு என்ற நபரை சந்திக்க அவரது நண்பர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முகமது சுகில் என்பவர் வந்துள்ளார். அவர் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை கவியரசுக்கு கொடுப்பதற்காக சிறைகாவலர்களிடம் கொடுத்துள்ளார்.

சிறைக்காவலர்களிடம் சிக்கிய நபர்..

இவ்வாறு கைதிகளுக்கு வழங்கப்படும் தின்பண்டங்கள் முறையாக ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அப்படி முகமது சுகில் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டுகளை சிறை காவலர்கள் ஸ்கேன் செய்த போது உள்ளே சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது.

பிஸ்கட்டுக்குள் கஞ்சா

உடனடியாக சிறை காவலர்கள் பிஸ்கட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்த போது வட்ட வடிவிலான பிஸ்கட்டுகளுக்குள் நடுவே தொலையிட்டு கஞ்சா பாக்கெட்டுகளை சொருகி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சிறைக்காவர்கள், சிறை கண்கணிப்பாளர் வினோத் உத்தரவின் பேரில் முகமது சுகிலை  அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.