தமிழ்நாடு

"வீட்டைவிட ஜெயில்லதான் சாப்பாடு சூப்பர்" தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

webteam

சாப்பிட வழியின்றி திருட்டில் ஈடுபட்டவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் சிறைச்சாலையில் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பெட்ரோல் திருடியவரை காவல்துறையினர் விசாரணைக்காக கா‌வல்நிலையம் அழைத்துச்சென்றனர். விசாரணையின் போது, சிறையில் நல்ல சாப்பாடு கிடைப்பதால், மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே பெட்ரோல் திருடியதாக கூறி காவல்துறையினரையே திகைக்க வைத்தார் அந்த நபர்.

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த அந்த நபரின் பெயர் ஞானபிரகா‌சம் என தெரியவந்துள்ளது. சரியாக வேலை கிடைக்காததால், கடந்த மாதம் சிசிடிவி கேமராவை திருடியுள்ளார். அதனால், ஞானபிரகாசத்தை கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். கடந்த ஜூன் 29ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த ஞானபிரகாசம், ஜெயிலில் நல்ல உணவு, போதிய ஓய்வு போன்றவை கிடைப்பதால் மீண்டும் அங்கு செல்ல திட்டமிட்டு செயல்பட தொடங்கியுள்ளார்.

அதற்காக,‌ கடந்த 5ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்றை திருடிய அவர் ஊர் முழுக்க சுற்றியுள்ளார். காவல்துறையினர் கைது செய்யாததால், மீண்டும் சிறைக்கு செல்ல முடியாதோ என நினைத்த ஞானபிரகாசம் காவல்துறையினர் பார்வையில் படும்படி ஜூன் 6ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பெட்ரோல் திருடியுள்ளார்.

அப்போதுதா‌ன், ஞானபிரகாசத்தை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அப்போதுதான், வீட்டில் நல்ல சாப்பாடு கிடைப்பதில்லை என்றும், சிறையிலேயே சுவையான சாப்பாடு கொடுப்பதாகவும் அதனாலேயே திருடியதாக கூறிய ஞானபிராகாஷ் கூறியுள்ளார். அவர் திருடிய இருசக்கர வாகனத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், ஞானபிரகாசத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.