தமிழகத்தில் முதல்முறையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த வகையில் செங்கல்பட்டு புறவழிசாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்தனர். இதில் அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சுரேஷை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் முதல்முறையாக மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டியவரை, செங்கல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.