செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் உரிமையாளரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலம் மற்றும் சுற்றுலா தளம் என்பதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்குள் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கும், திருக்கோவில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடுவதற்கும் வெளியூர் வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடும் பக்தர்கள் உடை மாற்றுவதற்கு தனியாருக்கு சொந்தமான உடைமாற்றும் அறை மற்றும் கட்டண கழிப்பறைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பெண் பக்தர் ஒருவர், கடற்கரைக்கு அருகே இருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார்.
அப்போது அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அருகிலிருந்த ராமேஸ்வரம் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் அக்னிதீர்த்த கடற்கரையிலிருந்த அந்த தனியார் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்ததில் அங்கு கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறையில் தனி தனியாக மூன்று ரகசிய கோமராக்கள் பொறுத்தியிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் ரகசிய கேமராவை பற்றி சோதனை செய்த போது அதில் கேமராவில் ஆண்கள் பெண்கள உடை மாற்றுவதும் வீடியோ பதிவாகி இருந்தது.
இதனையடுத்து லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராமேஸ்வரம் தம்பியான் கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.