தமிழ்நாடு

திண்டுக்கல்: வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பூனைக்கறி; அதிரடி காட்டிய வனத்துறை

Sinekadhara

திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி, 2 கத்திகள் மற்றும் பூனைக்கறி பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் அருகே உள்ளது சிறுமலை. இங்கு வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டு எருமை, முயல், கடமான், குரங்கு, காட்டுப் பூனை, புனுகு பூனை உட்பட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் அஞ்சுகுளிப்பட்டியைச் சேர்ந்த முத்தன் என்பவர் நேற்று இரவு அரிய வகை பூனையான புனுகு பூனையை வேட்டையாடியதாக சிறுமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அஞ்சுகுளிப்பாட்டிக்குச் சென்ற வனத்துறையினர் முத்தன் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசு அனுமதி பெறாத நாட்டு கள்ளத் துப்பாக்கி, இரண்டு கத்திகள், புனுகு பூனைக்கறி இருந்ததை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து முத்தனை சிறுமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். புனுகு பூனையை வேட்டையாடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து முத்தனை வனத்துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.