தமிழ்நாடு

ஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..!

ஐ போன் தொழில்நுட்பத்திற்கே சவால்.. ஹேக் செய்து விற்கும் சென்னை இளைஞர் கைது..!

webteam

ஐ போன்களின் தொழில்நுட்பத்திற்கே சவால் விடும் வகையில் அதன் பாதுகாப்பு அம்சங்களை ஹேக் செய்து புது போன்களாக மாற்றி விற்பனை செய்துவந்த சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பாண்டிபஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட  பகுதிகளில் கடந்த 9-ஆம் தேதியன்று விலை உயர்ந்த ஐ போன் எக்ஸ் போன்கள் வழிப்பறி செய்யப்பட்டன. இதனையடுத்து செல்போன்களை பறிகொடுத்த மக்கள் காவல்நிலையத்தை நாடினர். ஒவ்வொரு போனும் கிட்டத்தட்ட 1 லட்சம் வரை மதிப்புள்ள போன்கள். அடுத்தடுத்து ஐ போன்கள் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தால் காவல்துறையினர் அது மீதான விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனிடையே ஐ போனை பறிகொடுத்த இளைஞர் ஒருவரின் மற்றொரு எண்ணுக்கு மறுநாள் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட லிங்கிற்கு சென்றால் ஐ போனை மீட்டுவிடலாம் என தகவல் வந்திருக்கிறது. மேலும் ஆப்பிள் ஐடி பாஸ்வேர்டை பதிவு செய்யுமாறும் கேட்டிருக்கிறது. 

இதனிடையே எந்த எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்ததோ அந்த எண்ணின் முகவரியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த எண் கொடுங்கையூரை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அந்த எண் தன்னுடைய எண் இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். யாரோ அவரின் பெயரை பயன்படுத்தி போலி சிம்கார்டு வாங்கியதும் தெரியவந்தது.

இதனையடுத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் பொருட்டு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, சென்னை பெரம்பூரை சேர்ந்த அப்துல ரஹ்மான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். 26 வயது நிரம்பிய அந்த இளைஞர் செல்போன் கடை வைத்துள்ளார். இதுதவிர அவ்வப்போது ஐ போன்களை வழிப்பறி செய்வதுடன் அதனை ஹேக் செய்து புது போன்களாக மாற்றி குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்துள்ளது.

மிக அதிக பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் நிறைந்த ஐபோன்களை அவ்வளவு எளிதில் யாரும் ஹேக் செய்துவிட முடியாது. அப்படியிருக்க அத்தகைய போன்களையே 8-ஆம் வகுப்பு படித்த அப்துல் ரஹ்மான் ஹேக் செய்துள்ளார். அதாவது, திருடிய மொபைல்களில் இருக்கும் சிம்கார்டை கழற்றி வேறு ஒரு சிம்கார்டை அப்துல் ரஹ்மான் போடும்போது, போனின் உண்மையான உரிமையாளரின் மற்றொரு எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி செல்லும். அத்தகைய குறுஞ்செய்தியில் ஆப்பிள் ஐடி பாஸ்வேர்டு கேட்கப்படும்.

உரிமையாளர் நமக்கு போன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆப்பிள் ஐடியின் பாஸ்வேர்டை பயன்படுத்தும்போது, தான் கற்றுவைத்த ஹேக்கர் தொழில்நுட்பத்தால் போனை ஹேக் செய்து புது போனாக மாற்றிவிடுவார் அப்துல் ரஹ்மான். அவரிடம் இருந்து ஏராளமான விலை உயர்ந்த ஐ போன்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.