தமிழ்நாடு

‘பணக்காரர் ஆக ஆசை’ - திட்டமிட்டு 150 கார்களை திருடியவர் கைது

‘பணக்காரர் ஆக ஆசை’ - திட்டமிட்டு 150 கார்களை திருடியவர் கைது

webteam

பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடிய பிரபல கார் திருடன் பரமேஸ்வரனை சூலூர் காவல் துறையினர் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது ஆம்னி கார் திருடு போனதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி காரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். காரில் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் முன்னுக்கு பின்னாக பதில் கூறியுள்ளார். 

சந்தேகமடைந்த போலீசார் விசாரித்ததில் காரினை திருடி விற்பனை செய்த பிரபல கார் திருடன் என்பது தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆம்னி காரை பறிமுதல் செய்ததோடு பரமேஸ்வரனை கைது செய்தனர். 

சென்னை வியாசர் பாடியை சேர்ந்த பரமேஸ்வரன் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் தொடர்ந்து கார்களை திருடி வந்ததாகவும், இதற்கிடையில் சென்னையில் கார் மெக்கானிக்கல் பற்றி கற்றுக்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.