கரூர் மாவட்ட ஆட்சியருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக எனக்கூறி குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் வாசுதேவன். கடவூரில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி வாசுதேவன் பலமுறை கோரிக்கைவிடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். வாசுதேவனுடன் அவரது குடும்பத்தினரும் மக்களிடம் பிச்சை எடுத்தனர்.