ஓராண்டாக 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (54). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியில் தனது பாட்டியுடன் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வறுமையின் காரணமாக பால்ராஜ் வீட்டில் வேலை செய்து வந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட பால்ராஜ் சிறுமியிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஓராண்டாகச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றி வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி தனக்கு நேர்ந்ததைப் பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாட்டி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.