தமிழ்நாடு

இருளப்ப சாமியின் ஜீவசமாதி திட்டம் ஒத்திவைப்பு

Rasus

சிவகங்கை மாவட்டம் பாசங்கரை கிராமத்தில், முதியவர் இருளப்ப சாமியின் ஜீவசமாதி திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை அடுத்த பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பசாமி.  வயது 80. சிவ பக்தரான இவர், திருமணமாகி தனது குடும்பத்துடன் இக்கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 12 மணியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.00 மணிக்குள் ஜீவசமாதி அடையவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சிவபெருமான் தன் கனவில் வந்து ஜீவ சமாதி அடைய சொன்னதாகவும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து இதைக் காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாசங்கரை கிராமத்தில் குவிந்தனர்.

இதனிடையே இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஜீவ சமாதி என்பது சட்டத்தை பொறுத்தவரை தற்கொலை. இதில் குழப்பமே இல்லை. எந்தக் காரணங்கள் சொல்லி எந்த விதத்தில் இறப்பை தேடினாலும் குற்றமே. மத ரீதியாக இந்த முறையை அணுகுவதால் சட்டத்தில் இருந்து தப்பித்து விட முடியாது. இது சட்டத்திற்கு புறம்பானது.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதியவர் இருளப்பசாமியின் ஜீவசமாதி திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருளப்ப சாமிக்கு இரவில் 7 முறை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் ஜீவசமாதி திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஜீவசமாதிக்காக‌ பெரிய குழி தோண்டப்பட்டிருந்த நிலையில், காலையில் அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.