தமிழ்நாடு

காதுக்குள் நழுவிய மூளை - அறுவை சிகிச்சையில் சரிசெய்த மருத்துவர்கள்

காதுக்குள் நழுவிய மூளை - அறுவை சிகிச்சையில் சரிசெய்த மருத்துவர்கள்

webteam

காதுக்குள் இருந்த ஓட்டை வழியாக நழுவி கிடந்த மூளைத்திசுவை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

நாமக்கல்லை சேர்ந்த 54 வயதான லோகநாதன் என்பவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 மாதங்கள் கழித்து அவ்வப்போது அவருக்கு தலைவலி மற்றும் காதுவலி ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்கள் கழித்து அடிக்கடி காதுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் காதில் இருந்து நீர் வடிதல் ஏற்பட்டுள்ளது. காதினுள் இரண்டு இதயங்கள் துடிப்பது போன்று சப்தத்தை உணர்ந்துள்ளார். இதற்காக அவர் காது சொட்டு மருந்தை உபயோகப்படுத்தியுள்ளார். அப்போது 3 சொட்டுகள் மருந்து விட்டால் 20 சொட்டுகள் நீர் காதில் இருந்து வெளியேறும் எனவும் சட்டையே ஈரமாகும் அளவுக்கு இருக்கும் எனவும் லோகநாதன் தெரிவித்தார்.

இதையடுத்து மருத்துவரகளை தொடர்பு கொண்ட லோகநாதன் சிடி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலமாக சோதனை செய்து கொண்டார். அப்போது அவரின் காதினுள் மேல்பகுதியில் ஓட்டை இருப்பதும் அதன் வழியாக மூளைத்திசு ஒன்று நழுவி வந்திருப்பதும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “லோகநாதன் காதில் ஓட்டை ஒன்று இருந்தது. அதனுள் பழுப்பு நிறத்தில் மென்மையான திசு ஒன்று காணப்பட்டது. முதலில் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின் அதன் வழியாக வரும் திரவத்தை வைத்து அது மூளைத்திசு என கண்டறியப்பட்டது. மூளைத்துடிக்கும் சப்தத்தினால் அவருக்கு இரண்டு இதயம் துடிப்பது போன்ற சப்தத்தை உணர்ந்துள்ளார். 8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த மூளைத்திசுவை அகற்றி காதில் இருந்த ஓட்டை அடைக்கப்பட்டது” என தெரிவித்தனர்.