தமிழ்நாடு

மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி

மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி

Rasus

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களின் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆண்டு இதே நாளில், உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் மறைந்த கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். 6.5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தில் அமைக்கப்பட்ட இச்சிலையின் அகலம் 6.3 அடி ஆகும்.

சிலை முதல் பீடம் வரையிலான பகுதி 30 டன் எடை கொண்டுள்ளது. கிரானைட் கற்களால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பீடத்தில் 'கலைஞரின் 5 கட்டளைகள்' இடம்பெற்றுள்ளது. அதாவது ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’, ‘ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோ’, ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’, ‘ வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’, ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ ஆகிய கட்டளைகள் இடம்பெற்றுள்ளன. சிலை திறப்பு நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.