செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாடுகள், வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்கின்றனர். இந்நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக இருந்து வருகிறது.
மாமல்லபுரத்திற்க வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள கடல் பகுதியில் குளிக்கும்போது, கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 46 நபர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 6 நபர்களும், 2022 ஆம் ஆண்டு 14 நபர்களும், 2023 ஆம் ஆண்டு 8 நபர்களும், 2024 ஆண்டு அதிகபட்சமாக 18 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிர் காப்பாளராக மீனவர் ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டு அவர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுமட்டுமன்றி ‘காவல் துறையினர் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். நிரந்தரமாக பைபர் படகு கடற்கரையில் இருக்க வேண்டும். கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்’ என சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.