தமிழ்நாடு

`ஒரு கோடி பேருக்கு மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு செல்வோம்’- அமைச்சர் மா.சுப்ரமணியன்

நிவேதா ஜெகராஜா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம் திட்டத்தின்' கீழ் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் தற்போதைய உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம், மையிட்டான்பட்டி கிராமத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் 'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்' கீழ் 60,000,01-வது பயனாளியான பெரியசாமி அவர்களின் இல்லம் தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கினார்கள்.

ஒரு கோடி பேருக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டு விரைவில் அந்த இலக்கை எட்ட உள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைந்து வருவதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.