தமிழ்நாடு

“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்

“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்

rajakannan

தனது நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ‘தேவர் மகன்2’ என்று பெயர் வைக்கப்படாது என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நான் சாதிக்கு எதிரானவன். எனக்கு சாதி பெயரை சொல்வதில் விருப்பமில்லை. ஏன் சாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். மது ஒழிப்புக்கு எதிரான படத்தின் கதாநாயகன் யாராக இருப்பார்? நிச்சயம் அந்தத் திரைப்படத்தில் நாயகன் குடிகாரனாகதான் இருப்பான். 

எனது அனைத்து திரைப்படங்களிலும் சாதிக்கு எதிரான கருத்துகள் இடம்பெறும். படத்தின் உட்கரு அதுவாகத்தான் இருக்கும். அடுத்த படத்திற்கு ‘தேவர் மகன்2’ என்ற பெயர் நிச்சயம் வைக்கப்படாது. படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று கூறினார். 

மேலும், #MeToo விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல், “இருக்கின்ற பிரச்னையை எடுத்து வைக்கிறார்கள். ஆராய வேண்டிய அவசியம் இருந்தால் ஆராயலாம். இதில் சினிமா துறையை மட்டும் தனியாக சொல்ல வேண்டாம். அனைத்து துறைகளிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. புகார்கள் வெளியே வந்தால், இனிமேல்  
இதுபோன்ற பிரச்னைகள் வராது என்றே உலக அளவில் சொல்லப்படுகிறது. இரண்டு தரப்பிலும் இருக்கின்ற நியாயத்தை கேட்க வேண்டும். குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்கிவிடக் கூடாது. நாங்கள் செய்யும் அனைத்தையும் நீங்கள் படம் பிடித்து காட்டுவதால், சினிமா துறையில் அதிகம் பாலியல் புகார்கள் இருப்பதுபோல் தோன்றுகிறது” என்றார். 

உங்களுடைய குரு எல்லா கம்யூனிஸ்ட்களாக இருப்பதால், உங்களுடைய சிந்தனை கம்யூனிஸ்ட் சித்தாந்தமாக இருக்கும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, “என்னுடைய குரு காந்திதான். அவர் கம்யூனிஸ்ட் தான் என்றால் நானும் அப்படி இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அறுவறுப்பும் இல்லை” என்று பதில் அளித்தார். 

மாணவ, மாணவிகளை சந்திக்கக் கூடாது என தமிழிசை கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, “எனக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடலை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் பதட்டம் என்ன வென்று எனக்கு புரிகிறது. பதட்டப்பட்டு என்ன செய்ய முடிகிறது. எங்களுக்குள் நடக்கும் இந்த பரஸ்பர உடையாடல் அற்புதமானது. இதுமாற்றத்தை கொண்டு வருவதற்கான உரையாடல்” என்றார்.

சபரிமலை கோயிலில் எல்லா வயது பெண்களும் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு, “எல்லா இடங்களிலும் பெண்கள் சமமான நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால், எனது கருத்தினை அவர்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார். 

இந்தப் பதிலை கேட்டதும் கமல், என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் பலரும் திகைத்தனர்.