போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மத்திய அரசு சார்பில் 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது போக்சோ சட்டம். இந்தச் சட்டத்தில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. போக்சோ சட்டத்தில் தற்போது 18 வயதுக்குள் உள்ள சிறுமி அல்லது சிறுவரை பாலியல் உறவு அல்லது பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றம் செய்தவர் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்.
இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பாக நாமக்கல்லை சேர்ந்த சபரிநாதன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். அப்போது அவர் தமிழ்நாடு அரசு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, 16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அதனைக் குற்றமாக கருதாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அத்துடன் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வயையும் அரசு மக்களிடம் ஏற்படுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றின் தீமை குறித்து விழிப்புணர்வு செய்வதைபோல் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என நீதிபதி அறிவுறித்தியுள்ளார்.