‘நிவர்’ புயல் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் சென்னைக் காவல்துறையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டி உள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் இன்று மாலை காரைக்கால் - மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கிறது. தற்போது புயலானது கடலூரில் இருந்து 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ தொலைவிலும், சென்னையிருந்து 214 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்து வருவதால், சாமனிய மக்கள் கடுமையான இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்கும் வண்ணம் மீட்புபடையினர் மற்றும் காவல்துறையினர் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மக்களை மீட்கும் பணியினை களத்தில் நின்று செயலாற்றி வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முதியோர்களுக்கு காவலர்கள் உதவும் புகைப்படங்களைப் பதிவிட்டு, “ அவசரக்காலக்கட்டங்களில் களத்தில் நின்று பணிபுரிபுவர்களின் கடமைக்கு ஒரு சல்யூட் செலுத்துங்கள். அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.