தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக 1994-ம் ஆண்டு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த அவர் தூத்துக்குடி எஸ்பி, சென்னை கமிஷனர், சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குடியரசுத் தலைவர், முதலமைச்சர் விருதுகள் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நியமன அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் வந்தது.
தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய டிஜிபி-யாக மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1994-ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் 22-வது வயதிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பணியாற்றியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்,
சிபிஐ அதிகாரி, சிபிசிஐடி ஐஜி, மதுரை கமிஷனர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், டிஜிபி அலுவலகத்தில் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி, கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி, எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்த அவர் தற்போது தமிழ்நாட்டின் டிஜிபி-யாக பொறுப்பேற்கவுள்ளார்.
மகேஷ்குமார் அகர்வால் சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருதையும், பொது சேவையில் சிறந்து விளங்கியதற்கான முதலமைச்சர் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.